உலகக்கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றம்!

உலகக்கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ சீருடையை மாற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் தேசியக் கொடி சிவப்பு மற்றும் பச்சை நிறத்தை கொண்டதாகும். ஆனால் கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சீருடை, பாகிஸ்தான் அணியின் சீருடை போல் இருந்ததால், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
குறித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சீருடையை மாற்ற வேண்டிய நிலை தற்போது, ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பேச்சாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், ‘வணிக சிக்கல்கள் காரணமாக சிவப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளும்படி உலக கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுகொண்டது. இதனாலேயே பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் சீருடை உருவாக்கப்பட்டது.
ஆனால் அதில் சிவப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே, நாம் ஐ.சி.சியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். வீரர்களின் பெயர்கள் தற்போதிருப்பது போல் அமையும். பங்களாதேஷ் பெயர் சிவப்பில் இருக்கும்’ என கூறினார்.
இதேவேளை, பங்களாதேஷ் அணியின் சீருடை வெளியானதை அடுத்து சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததோடு, இதனை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் சபர் ஹொஸைன் சௌத்ரியும் கடுமையாக எதிர்த்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எமது தேசிய கொடியின் நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை, ஆண்டாண்டு காலமாக பங்களாதேஷ் புலிகளின் சீருடையில் பிரதிபலித்தது. அது தொடர்ந்தும் இல்லாதது கவலை அளிக்கிறது’ என்று சௌத்ரி டுவிட்டரில் குறிப்பிட்டார்.
இது பாகிஸ்தான் அணியின் சீருடையுடன் ஒத்துப்போவது பற்றி பல கிரிக்கெட் இரசிகர்களும் அவதானித்தனர். 1971ஆம் ஆண்டு பல உயிரிழப்புகளுடன் பெரும் போராட்டத்திற்கு பின்னரே பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் பாகிஸ்தான் சீருடையுடன் ஒத்துப்போவது பற்றிய விமர்சனம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
‘சீரூடையில் பங்களாதேஷ் என்று எழுதப்பட்டிருக்கிறது. எப்படி அது பாகிஸ்தானுடன் குழப்பிக்கொள்ள முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.
‘புலியின் படம் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சின்னத்தைப் பார்த்துவிட்டு அது பங்களாதேஷ் சீரூடையல்ல பாகிஸ்தான் சீரூடை என்று ஒருவர் நினைத்தால் அவர் பாகிஸ்தானில் இருந்து கொள்ளட்டும்’ என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்றதோடு அந்த அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் 2 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
அதற்கு முன்னர் அந்த அணி எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை அயர்லாந்தில் நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.