உலகக்கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை தலைவராக கெய்ல் நியமனம்!
இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றது.
இந்த நிலையில், அதற்கேற்றாற் போல், அணிகளில் தற்போது பல மாற்றங்களும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் துணைத் தலைவராக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், இந்த உலகக் கிண்ண தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, தனது இறுதி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள கிறிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் செயற்படவுள்ள நிலையில், அவருடன் இணைந்து உப தலைவராக கிறிஸ் கெயில் செயற்படவுள்ளார்.
சிக்சர் மன்னன் என வர்ணிக்கப்படும் 39 வயதான கிறிஸ் கெய்லை, துணைத் தலைவராக நியமனம் செய்ததை, அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் மற்றும் பல்வேறு வீரர்கள் வரவேற்றுள்ளனர். அத்தோடு இரசிகர்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அணித்தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில், “மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்த போட்டியில் விளையாடினாலும் அது எனக்கு கௌரவம்தான். அதிலும் இந்த உலகக்கிண்ண தொடர் எனக்கு சிறப்பு வாய்ந்த தொடர் ஆகும். ஒரு மூத்த வீரராக, அணியின் தலைவராக மற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக அணியின் வெற்றிக்கு பாடுபடுவது எனது பொறுப்பு.
அநேகமாக இது மிகப்பெரிய உலகக் கிண்ண தொடராக இருக்கும். அதனால், எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நாம் சிறப்பாக விளையாடுவோம் என்பதை நான் அறிவேன். அத்துடன், மேற்கிந்திய தீவுகளில் உள்ள மக்களுக்காக நாம் சிறப்பாக விளையாடுவோம்” என கூறினார்.
உலகக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக கிறிஸ் கெயில் உள்ளார். இவர், மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 289 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,151 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, 215 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையானது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கிறிஸ் கெயில் இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். இறுதியாக இவர், 2010ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டிருந்தார். 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சுமார் 90 போட்டிகளுக்கு அணித்தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி, மே 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கிண்ண தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி மே 31ஆம் திகதி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.