உலகக்கிண்ண தொடருக்கு ஐ.பி.எல். தொடரின் துடுப்பாட்ட அனுபவம் கைகொடுக்கும்: வோர்னர்- ஸ்மித்
இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருக்கு, ஐ.பி.எல். தொடரில் விளையாடியபோது கிடைத்த அனுபவம் கைகொடுக்கும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கூறியுள்ளனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவராக இருந்த டேவிட் வோர்னர், தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் அவுஸ்ரேலியா ஓராண்டு தடை விதித்தது.
இதனையடுத்து, இருவரும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு ரி-20 லீக் தொடர்களில் விளையாடினார். இதன்பிறகு தடை முடிந்தும் அவுஸ்ரேலியா அணிக்கு உள்வாங்கப்படாத இவர்கள், காயத்திற்கு உள்ளாகினர்.
இதன்பிறகு, காயத்தில் இருந்து மீண்ட இவர்கள், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாட உள்வாங்கப்பட்டனர்.
டேவிட் வோர்னர் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கும் விளையாடினர்.
இருவரும் தனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக செய்து, தற்போது உலகக்கிண்ண தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்துக் கொள்வதற்காக நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் நாடு திரும்புவதற்கு முன்னர், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்த அவர்கள், உலகக்கிண்ண தொடருக்கு, ஐ.பி.எல். தொடரில் விளையாடியபோது கிடைத்த அனுபவம் கைகொடுக்கும் எனவும் கூறினர்.
இதுதொடர்பாக டேவிட் வோர்னர் கூறிய கருத்துக்களை முதலில் பார்க்கலாம், ‘எனக்கு தரப்பட்ட பணியை சிறப்பாக செய்தேன். நல்ல செயற்திட்டம், உள்ளுணர்வு போன்றவற்றால், எங்கள் அணி ஒருங்கிணைந்து விளையாடியது. களப்பணியாளர்களும் சிறப்பான ஆடுகளத்தை அமைத்திருந்தனர்.
சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்து அணியை நல்ல நிலையில் வைத்திருந்தோம் .
தடைக் காலத்தால் 18 வாரங்கள் துடுப்பாட்ட மட்டையை தொடவில்லை. சிறந்த கணவர், தந்தையாக இருந்தது அணிக்கும் உதவியாகவும் இருந்தது. வழக்கமான நமது இயற்கையான துடுப்பாட்டத்தை வெளிக்காட்ட வேண்டும். இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கிண்ண தொடரில் பெரிய ஓட்டங்களை எதிர்பார்க்கலாம். நடப்புச் சம்பியனாக உள்ள நாங்கள், வீரர்களின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து எதிர்கொள்கிறோம்’ என கூறினார்.
இதனைதொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் கூறிய கருத்துக்களை பார்க்கலாம், அ’ஐ.பி.எல். தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக உதவிகரமாக இருந்தது.
என்னுடைய தனிப்பட்ட முறையில் ஐ.பி.எல், சிறந்த வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கொடுத்தது.
ரி-20 கிரிக்கெட் எப்போதுமே 50 ஓவருக்கு தயாராக உதவும் என்று நினைப்பவன் நான். ரி-20 போட்டியின் நீடிக்கப்பட்ட போடடி;தான் 50 ஓவர் கிரிக்கெட்” என கூறினார்.
டேவிட் வோர்னர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 1 சதம் 8 அரைசதங்கள் அடங்களாக 692 ஓட்டங்களை பெற்று, அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித், நடப்பு ஐ.பி.எல். தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் அடங்களாக 319 ஓட்டங்களை குவித்து, அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.