உலகமே இந்திய ஆயுதப்படையைப் பாராட்டுகிறது – மோடி
ஐ.நா முன்னெடுத்திருந்த அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது இந்திய ஆயுதப் படை வழங்கிய பங்களிப்பிற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் இன்று(புதன்கிழமை) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி இமயமலை எல்லைப் பகுதியில் இந்திய திபெத்திய வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் ஹர்சில் என்ற இடத்தை இன்று சென்றடைந்த பிரதமர் எல்லைப் படை வீரர்களோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
இதன்போது எல்லை வீரர்களுக்கு இனிப்புப் பலகாரங்களை வழங்கி வாழ்த்தப் பேசிய விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில், ”எங்கோ தொலைதூர பனிபடர்ந்த உயர்ந்த மலைப்பகுதிகளில் தேசத்தின் வலிமையைப் பறைசாற்றி, தங்கள் கடமையை ஆற்றிவரும் ஜவான்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, 125 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் கனவுகளையும் பாதுகாத்து நிற்கிறீர்கள்.
தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. அது நன்மையின் ஒளி பரவச் செய்யும், அச்சத்தை விரட்டிவிடும். அவ்வகையில் எல்லையிலுள்ள வீரர்களும் தங்கள் பொறுப்புணர்ச்சியாலும் அச்சமின்மையாலும் மக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் அச்சமற்ற தன்மையையும் பரவ உதவுகிறார்கள்.
நான் குஜராத் மாநில முதல்வராக இருந்த காலத்திலிருந்தே தீபாவளிக்கு படைவீரர்களை சந்தித்து வருகிறேன். நான் எப்போது கைலாஸ் மானசரோவர் சென்றாலும் யாத்திரையின் ஒரு பகுதியாக இந்திய திபெத் எல்லைக் காவலர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா மிகச் சரியாக முன்னேறி வருகிறது. முன்னாள் படைவீரர்களிடையே இருந்து வரும் வேறுபாடுகளைக் களைந்து ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற நிலையை (ஓஆர்ஓபி) நாம் அமல்படுத்தியுள்ளோம்.
ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில், பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகள் உலகம் முழுவதிலும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றன என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.