உலக பயங்கரவாதத்திற்கெதிராக கைகோர்க்க இலங்கை, பாகிஸ்தான் தீர்மானம்!

உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கெதிராக, ஒன்று திரள பாகிஸ்தானும் இலங்கையும் தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனை இன்று (சனிக்கிழமை) இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானத்தை எடுத்தனர்.
இதன்போது, இலங்கைக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானிய ஜனாதிபதி எதிர்காலத்தில் அச்சந்தர்ப்பங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
உலக பயங்கரவாதத்திற்கெதிராக அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியதுடன், கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது பாகிஸ்தான் இலங்கைக்காக வழங்கிவரும் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி பாராட்டினார். இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு பாகிஸ்தான் தயார் என்றும் பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி, அடுத்த சார்க் விழாவை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் இந்த பயணம் உதவியுள்ளதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.