உழைப்பால் உலகை மிளிரச்செய்வோம் – ஒற்றுமையால் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்
In சிறப்புக் கட்டுரைகள் May 1, 2019 11:47 am GMT 0 Comments 10977 by : Varshini

முதலாளித்துவ பொருளாதார முறைமைக்கு சவாலாக, உழைப்புக்கு முன்னுரிமை வழங்குகின்ற தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூரும் 133ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.
இற்றைக்கு 133 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8 மணிநேர வேலையை பிரகடனப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1886ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி வரலாற்றில் கறைபடிந்த நாள். தொழிலாளர் உரிமையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராடியவர்கள் மீது அதிகார வர்க்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து தாக்குதல் நடத்தினர்.
நான்கு நாட்களுக்கு மேல் தொடர்ந்த இப்போராட்டத்தில், சுமார் 150,000 தொழிலாளர் வர்க்கம் கைகோர்த்தது. எட்டு மணித்தியால வேலை நேரம் மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பவற்றை பெற்றுத்தந்த இந்த போராட்டமானது, பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் பின்னரே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்தும், இரத்தத்தால் பெற்றுக்கொண்ட வெற்றியை நினைவுகூர்ந்தும், மே முதலாம் திகதியன்று சிவப்புக் கொடியேந்தி இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், பயங்கரவாத பிடிக்குள் சிக்குண்டு பல உயிர்களை இழந்த இலங்கை திருநாட்டில், இம்முறை மே தினம் கொண்டாடப்படவில்லை. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்கான பிரார்த்தனையாக இலங்கையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளின் பாரிய திட்டங்கள் இன்னும் முறியடிக்கப்படவில்லையென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பை கருத்திற்கொண்டு மே தினக் கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
உழைப்பினால் உயரும் மனிதன் கடந்த ஒருவார காலமாக வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் முடங்கிப் போகும் அளவுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்துகின்றது. நாளாந்தம் தொழில்செய்வோர், வீதியோர கடைகளில் தொழில்புரிவோர், வேறு பிரதேசங்களிலிருந்து வந்து தலைநகர் கொழும்பில் பணியாற்றுவோர் ஏன் தமது சொந்த இடங்களில் உள்ளவர்களால்கூட இன்று தொழிலுக்கு அச்சமின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனால் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கும் மக்கள், அன்றாட ஜீவனோபாயத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
வழமையாக கூட்டங்கள், பேரணிகள், மேடைப் பேச்சுக்கள் என நிறைந்து வழியும் கொழும்பு இம்முறை வெறிச்சோடிக் காணப்படுகிறது. பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பொது இடங்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளதால் இவை தவிர்க்கப்பட்டுள்ளன.
வேறு மாவட்டங்களிலும் தொடர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால், மக்கள் வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர். அமைதியாய் இருந்த இலங்கையை ஆட்டிப்படைக்கும் பயங்கரவாதம், மக்களின் உழைப்பை முடக்கிவிட்டது. பயங்கரவாதத்தை முறியடித்து, நாட்டின் இயல்புநிலையை மீள கொண்டுவருவதே இன்று அரசாங்கத்தின் முன் காணப்படும் பாரிய சவாலாக உள்ளது.
உழைப்பின்றி வாழ்க்கையில்லை. உழைப்பின்றி முன்னேற்றமில்லை. உழைக்கும் கரங்கள் ஓங்கி உழைப்பால் உலகை மிளிரச்செய்வோம். அதற்கு ஒற்றுமை எனும் பலமான ஆயுதத்தை ஏந்தி பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்.
கலாவர்ஷ்னி கனகரட்ணம்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.