பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது- ஜனாதிபதி
In இலங்கை May 1, 2019 2:41 am GMT 0 Comments 2043 by : Dhackshala
பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாளாந்த வேலை நேரத்தை எட்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே மே தினமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “133 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அத்தோடு விட்டுவிடாது அதை தொடர் போராட்டமாக மாற்றி தமது உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தை வழிநடத்தும் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தினருக்கும் நான் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாட்டாளி மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்ற உலகளாவிய புரிந்துணர்வை நம் நாட்டின் அச்சுக்கோப்பாளர்களே முதலில் உணர்ந்து கொண்டனர். அதையடுத்தே ரயில், மாட்டுவண்டி, ட்ராம்ப் வண்டி, துறைமுகம் ஆகிய துறை சார்ந்த தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் எழுப்பினார்கள். அத்தோடு ஓய்வூதிய உரிமை, ஊழியர் சேமலாப நிதியம் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் மே தின ஊர்வலங்களில் கோஸங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலன்களாகும் என்பதை நாம் அறிவோம்.
இலங்கையானது உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் பற்றிய உலக தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் இணக்கப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய ஒத்துழைப்புடன் செயற்படும் ஒரு தேசமாகும். பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நாம், சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்கும் பயணத்தில் அவர்களது பலத்தின் அவசியத்தை உணர்ந்தவர்களாகவே இருக்கின்றோம்.
எதிர்பாராத விதத்தில் நாட்டினுள் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இம்முறை மே தின நிகழ்வுகளையும் ஊர்வலங்களையும் நடத்துவதில்லை என்ற முடிவிற்கு அநேகமான அரசியல் கட்சிகள் வந்திருக்கின்றன. ஆகையால் உழைப்பின் உண்மையான சொந்தக்காரர்களாகிய நாம் சம உரிமைகளைக் கொண்ட மனித குலம் என்ற வகையில் நமது உரிமைகளையும் சகவாழ்வினையும் இன்னல்கள் அற்ற வாழ்க்கை சூழலையும் உருவாக்கும் பணியில் ஒன்றுபட்டு செயற்படும் எதிர்பார்ப்புகளை மென்மேலும் உறுதியான விதத்தில் கொண்டுசெல்வதற்கு இத் தொழிலாளர் தினத்தில் உறுதி பூணுவோமாக.
உங்கள் அனைவரினதும் முற்றுப்பெறாத இன்றைய போராட்டமானது, எதிர்கால முன்னேற்றகரமான பாதையினை உருவாக்கிக்கொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையோடு அனைத்து உழைப்பாளி வர்க்கத்தினருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.