ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்
In இலங்கை February 15, 2021 4:20 am GMT 0 Comments 1251 by : Yuganthini

ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாதவர்கள், அவரது குடும்பத்தை அச்சுறுத்தியமையினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
அதன் காரணமாக அச்சமடைந்த அவரது குடும்பம், கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாதவர்கள், தங்களை வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்தியதுடன் தில்லைநாயகத்தின் மனைவி வங்கியில் மேலதிகமான பணத்தினை பெற்று வந்ததாகவும் அதனை மீளத்தருமாறு கூறியதுடன் ஊடகவியலாளரான தில்லைநாயகத்தை பற்றியும் மிரட்டும் தொனியிலும் விசாரித்து சென்றுள்ளனர்.
கல்முனையில் வசித்து வந்த ஊடகவியலாளரான தில்லைநாயகம் இதற்கு முன்னரும் பல தடவைகள் இனந்தெரியாதவர்களினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதுடன் அவரது கல்முனையிலுள்ள வீட்டிற்கு இரவு வேளையில் புகுந்த இனந்தெரியாதவர்கள் அவரது ஊடகக்கருவிகள் உட்பட ஊடகம் சம்பந்தமான ஆவணங்களையும் எடுத்துச்சென்றிருந்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இதற்கு முன்னரும் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் கல்முனை மனித உரிமை அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.