ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் – ஐ.நா

அண்மைக்காலமாக நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள ஊடக சுதந்திரத்தை பற்றி ஐக்கிய நாடுகள் சபை கவலை அடைந்துள்ளது.
அத்துடன் உலகளாவியரீதியில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சர்வதேசத்தை வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு நொவம்பர் 2 ஆம் திகதி மாலியில் இரண்டு பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 1,010 ஊடகவியலாளர்கள் தங்களது பணியைச் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் பத்தில் ஒன்பது கொலைகளுக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதையும் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளை நீதிமன்றுக்கு கொண்டு வருவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.