
எதிர்காலத்தில் தமிழர்கள் உரிமைகளுக்காக எவ்வாறு போராட வேண்டும்?
December 30, 2018 9:34 am GMT
‘தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடத்தயாராக இல்லை என்றால் தனது கட்சியை கலைத்துவிட்டு கொழும்பிலுள்ள வீட்டுக்குச் சென்றுவிடுவேன்’ என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் என்று கூறியதும் அவரை எவருக்கும் தெரியாது. அதற்குக் காரணம் அத்தகைய அடையாளத்தை நோக்கி விக்கிணேஸ்வரன் உழைக்காதவர், அந்தப் பெயரையும் தமிழ் மக்கள் பேரவையினரே அவருக்கு பொருத்திவிட்டுள்ளனர். தன் மீது பொருத்தப்பட்டுள்ள அந்த அடையாளத்தை சுமப்பதற்கே விக்கிணேஸ்வரனுக்கு ஒவ்வாமையாக இருக்கின்றது.
ஆகவே ‘முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கிணேஸ்வரன்’ என்று கூறினால் ஓரளவுக்கு அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். அந்தவகையில் விக்கிணேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் சிக்கிக் கொண்டு திணறுகின்றார்.
அவர் ஏற்கனவே அரசியலுக்கு முழு மனதோடு வந்தவரல்ல. அவர் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்வதன் தாற்பறியங்களை ஓரளவுக்கு தெரிந்தவர்.
அதாவது தமிழ் மக்களின் அரசியல் தளமானது இரண்டு வகையானது. ஒன்று தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே காலத்தை வீணடிப்புச் செய்வது, இரண்டாவது மாற்று யோசனைகளுக்கு ஏற்றவாறு தமிழ் மக்களை நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் பயணிக்கச் செய்வது.
இதில் தமிழ்த் தேசியம் பேசுவோரின் நிலைப்பாடானது, பிரதேச சபை, மாகாணசபை, நாடாளுமன்றம் என அனைத்து பிரதிநிதித்துவங்களையும் பெற்றுக்கொள்வதன் ஊடாக தாமே தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைமைகள் என்பதை நிறுவுவதாகும். மாறாக அந்த அரசியல் அதிகாரங்களை முழு மூச்சாக பிரயோகித்து தமிழ் மக்களை மீள் எழுச்சி கொள்ளச் செய்து, அவ்வாறு மீண்டு எழுந்த தமிழ் மக்களின் தலைமை தாமே என்று கூறுவதில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
எனவேதான் தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொள்வோரின் அரசியல் முன்னெடுப்புகள் வெறுமெனவே தேர்தல்களில் வாக்குகளை வேட்டையாடுவதிலும், பதவிகளை நிரப்பிக்கொள்வதிலும் மட்டும் தீவிர அக்கறை காட்டுகின்ற எவரும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள எவ்விதமான பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வுகளைக் காண்பதற்கு இதுவரை முயற்சிக்காதவர்கள்.
மறுவளமாகப் பார்த்தால் மாற்று அரசியல் வழிமுறையை முன்னிறுத்துவோர் எனப்படுவோர் முன்வைப்பது நடைமுறைச்சாத்தியமாகத் தெரிந்தாலும், அவர்கள் தமக்குக் கிடைக்கின்ற அரசியல் வாய்ப்புகளை அபிவிருத்தி, அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து வந்திருந்தாலும், அவர்கள் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை செய்யவில்லை.
அதற்காக அவர்கள் கூறுகின்ற காரணம் என்னவாக இருக்கின்றது என்றால், தமக்கு போதுமான அரசியல் அதிகாரங்கள் கிடைக்கவில்லை என்றும், கிடைக்கின்ற அதிகாரங்களுக்கு ஏற்ப செய்யக்கூடியதையே செய்கின்றோம் என்றும், தமக்கு கூடுதலான அரசியல் அதிகாரங்கள் கிடைக்குமாக இருந்தால் தம்மால் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு இவை இரண்டு முறைமையை விடவும் புதிய வழிமுறையாக எதைக் காட்டுவது என்பதே விக்கிணேஸ்வரனின் நிலைப்பாடாக இருப்பதாலேயே அவர் அரசியலுக்கு வருவதற்கு பின்னடித்தார். ஆனாலும் வற்புறுத்தல்களால், பழைய பிளாவில் புதிய கள்ளாக அவரை அரசியலுக்குள் ஊற்றிவிட்டார்கள்.
எல்லாமும் தெளிவாகத் தெரிந்திருந்தும் அரசியலுக்கு வர நேர்ந்ததையும், அதிலிருந்து மீளமுடியாமல் இருப்பதையும் எண்ணி முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்கிணேஸ்வரன் புலம்பாத நாள் இல்லை. ஆனாலும் விக்கிணேஸ்வரனைச் சுற்றியிருந்த கூடாத கிரகங்கள், விக்கிணேஸ்வரனை ஒரு பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்வதற்கு வகுத்துக்கொண்ட திட்டமே பின்னாளில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும், அதன் மறுமுகமான தமிழ் மக்கள் கூட்டணியுமாகும்.
அதற்குள்ளும் விக்கிணேஸ்வரன் விருப்பம் இல்லாமலே இழுத்துவரப்பட்டார். இப்போது அந்த பாரத்தை தனித்து சுமப்பதற்கு முடியாமல், கொள்கையுடன் கூட்டுச் சேர வாருங்கள் என்று நாளாந்தம் ஒரு அறைகூவல் விடுக்கின்றார்.
அவர் எதிர்பார்த்ததுபோல் தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்திக்கொள்வதற்கான கூட்டுக்கள் அமைவது சாத்தியமில்லாமல், முன்னர் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவர்களே இப்போது கூட்டணிக்குள்ளும் முகம் காட்டும் நிலைமை அதாவது குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓடும் அரசியலை எவ்விதமான நம்பிக்கையில் தலைமை தாங்குவது என்ற சந்தேகமே விக்கிணேஸ்வரனுக்கு வந்துள்ளது.
ஆகையால்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வராவிட்டால் தனது கட்சியை கலைத்துவிட்டு கொழும்புக்கு சென்றுவிடுவேன் என்று தற்போது கூறியிருப்பதாகும். தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராட முன்வரவே வேண்டும் என்றால், விக்கிணேஸ்வரன் எவ்விதமான போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ் மக்கள் அகிம்சைப் போராட்டத்தை நடத்திவிட்டார்கள், பெரும் ஆயுதப் போராட்டத்தை நடத்திவிட்டார்கள், எதிர்ப்பு அரசியல் மற்றும் இணக்க அரசியல் போராட்டங்களையும் நடத்திவிட்டார்கள்.
இந்திய தலையீடு, இராணுவ வருகை, ஜப்பான் மத்தியஸ்தம், நோர்வே மத்தியஸ்தம், போன்ற சர்வதேச அழுத்தங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை நிறைவேற்றம், புலம்பெயர் சமூகத்தின் சர்வதேசம் மத்தியிலான அழுத்தங்கள் என்று பலவிதமான போராட்டங்களை தமிழ் மக்கள் நடத்திவிட்டார்கள்.
இத்தனைக்குப் பிறகும் நாம் எதிர்பார்த்த அரசியல் உரிமையும் கிடைக்கவில்லை. பொருளாதார தன்னிறைவும் தமிழர்களுக்கு சாத்தியமாகவில்லை. இந்த அனுபவங்களை ஒரு படிப்பினையாகக் கொண்டே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் புதிய பாணியில் அல்லது தந்திரோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதில் விக்கிணேஸ்வரன் முன்வைக்கும் போராட்ட முறைமை என்ன? அதன் தந்திரோபாய வழிமுறை என்ன? அதில் விக்கிணேஸ்வரனின் பங்களிப்பு என்ன? தமிழ் மக்கள் எவ்விதமான பங்களிப்பைச் செய்யவேண்டும்? என்பதைப் பற்றிய தெளிவை முதலில் தமிழ் மக்களுக்கு விக்கிணேஸ்வரன் வழங்க வேண்டும்.
தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று கூறுவது இலகுவான விடயம், எவ்விதமாகப் போராட வேண்டும் என்பதையும், அதற்கான அகச்சூழலும், புறச்சூழலும் எவ்வாறான சாத்தியங்களுடன் இருக்கப்போகின்றது என்பதையிட்டு விக்கிணேஸ்வரன் ஒரு ஆராய்வைச் செய்து அதன் மீது தமிழ் மக்களை நம்பச் செய்ய வேண்டும்.
தமிழ் மக்களை வழிமுறை தெரியாத போராட்டம் ஒன்றுக்கு வருமாறு அறைகூவல் விடுப்பதும், கண்மூடித்தனமாக ஒரு பிம்ப வெறுமையை நம்பும்படியாக கோரிக்கைவிடுப்பதும் அரசியல் கோஷங்களாக இருக்கலாமே தவிர, செயலுக்கு ஒத்துவராது. எனவே அறைகூவலானது தனது வலிமையை இழக்கும்போது, அந்த இயலாமையை மறைப்பதற்காக, தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வரவில்லை என்று மக்கள் மீது சுமத்திவிட்டு இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொண்டதே கடந்த கால வரலாறாகவுள்ளது.
-
பிரதமரை வடக்கிற்கு அழைத்து நடந்தவையும், நடந்திருக்க வேண்டியவையும்
அண்மையில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு பிரதமர்...
-
மாகாணசபைக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுனராக ஹிஸ்புல்லா நியமி...