எதிர்வரும் இரு தினங்களுக்கு விசேட சுற்றிவளைப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
In இலங்கை December 29, 2020 9:42 am GMT 0 Comments 1628 by : Dhackshala
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுவோர் தொடர்பாக நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையில் ஆயிரத்து 927 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 1927 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 1800 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அவர்களின் பலர் குற்றத்தை ஏற்றுக்கொண்டும் உள்ளனர். இதன்போது பலரிடம் அபராத பணமும் அறவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தொடக்கம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் விருந்துபசாரங்களில் கலந்துகொள்ளுபவர்களுக்கு எதிராக இதன்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் தமது குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து தங்களது வீடுகளிலேயே கொண்டாடுங்கள். கூட்டம் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.