எத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்!

எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்க படையினருக்கும் டிக்ரே மாகாணப் படையினருக்கும் இடையே மிகேலி நகருக்கு வெளியே கடும் சண்டை நடந்துவரும் நிலையில், உயிருக்கு அஞ்சி அங்குள்ள மக்கள் வெளியேறிவருகின்றனர்.
சுமார் 6 இலட்சம் பேர் வசித்து வரும் டிக்ரே பிராந்தியத்தில், சண்டை தொடர்வதால், இப்பகுதியில் உணவுப்பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும், தாக்குதலுக்குப் பயந்தும் மிகேலி நகரிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், மிகேலியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டின் சமாதான அமைச்சகத்தின் கீழ் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எத்தியோப்பிய அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.
கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய விதித்த 72 மணி நேர காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மத்திய இராணுவம் தங்கள் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பியாவில் டைக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.
டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.
இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.
இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின்ன் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. தற்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.