எத்தியோப்பியாவில் டிக்ரே மாகாண தலைநகர் மேகேலியைக் கைப்பற்றியது இராணுவம்!

எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத்தில் தாக்குதல் நடத்தி வரும் அரச படையினர், தலைநகர் மேகேலியைக் கைப்பற்றியுள்ளனர்.
டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய இராணுவம் தங்கள் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கடும் மோதலுக்கு பிறகு தலைநகர் மேகேலியைக் கைப்பற்றியுள்ளதாக அரச படையினர், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் அபே அகமது கூறுகையில், ‘டிக்ரே மாகாண அரசாங்கத்துடனான மோதல் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாகாணத் தலைநகர் மேகேலியை இராணுவம் கைப்பற்றி விட்டது.
தற்போது டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்) தலைவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்’ என கூறினார்.
டிக்ரேவை ஆளும் டிபிஎல்எஃப், மாகாணத்திலுள்ள இராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியதாக கடந்த 4ஆம் திகதி குற்றம் சாட்டிய அபை அகமது, அந்த அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்குது.
சுமார் 6 இலட்சம் பேர் வசித்து வரும் டிக்ரே பிராந்தியத்தில், சண்டை தொடர்வதால், இப்பகுதியில் உணவுப்பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், தாக்குதலுக்குப் பயந்தும் மிகேலி நகரிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.