எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது – அரசாங்கம்

நாட்டுக்குள் எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றோம் என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,
”நாட்டின் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலை தற்போது கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் இடம்பெறும். காயமடைந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளடங்குகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் அமைதியை பேணுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டுக்குள் எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றோம். இன்று முதல் மேலும் முழுவீச்சுடன் இவ்வாறான குழுக்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெகுவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.