எந்தவொரு விமர்சனங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன்: ரிஷப் பந்த்
தன்மீதான எந்தவொரு விமர்சனங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இடது கைது துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகில் பெரிதும் பேசப்பட்டவர்.
குறைந்த பந்தில் விரைவாக ஓட்டங்கள் சேர்க்கும் திறமையுள்ள இவருக்கு உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வாய்ப்பை மற்றொரு அனுபவம் மிக்க விக்கெட் காப்பாளரான தினேஷ் கார்த்திக் பறித்து விட்டார்.
ஆனால் ரிஷப் பந்த்தை உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இணைத்திருக்க வேண்டுமென பல முன்னாள் வீரர்கள் வாதடியிருந்த போதும், அவரை விட தினேஷ் கார்த்திக் அனுபவமிக்க வீரர் என கூறி தேர்வுக் குழு இந்த கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில், ‘போட்டியை முடிவு செய்வது மிக முக்கியமானது. இந்த வேலையை தொடர்ச்சியாக செய்ய கற்றுக் கொண்டு வருகிறேன். உங்களுடைய அனுபவம் மற்றும் தவறுகளில் இருந்து மட்டுமே பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. தற்போது எனக்கு 21 வயதே ஆகிறது. இந்த வயதில் 30 வயது மனிதர் போல் யோசிப்பது கடினம்.
எந்தவொரு விமர்சனங்களையும் நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய மனநிலை மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் நான் அதிக அளவில் முதிர்ச்சியடைய வேண்டியுள்ளது. அதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.
அணிக்கு தேர்வாகாத போது அது பின்னடைவாக இருக்கும். எனக்க அந்த அனுபவம் உள்ளது. ஆனால், தொழில் முறை வீரர்களுக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும்” என கூறினார்.
21 வயதான விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த், இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 93 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.