எனது மகன் நல்ல சிறுவனாகவே வளர்ந்தான் : சுதேஷ் அம்மானின் தாயார்
In இங்கிலாந்து February 3, 2020 4:31 pm GMT 0 Comments 3405 by : S.K.Guna

ஸ்ரெதம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி சுதேஷ் அம்மான் குறித்து தாயார் ஹலீமா ஃபராஸ் கான் தெரிவிக்கையில்; தனது மகன் ஒரு கண்ணியம் மிக்க நல்ல சிறுவனாகவே வளர்ந்ததாகக் கூறியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மகன் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது அம்மா எனக்கு கொஞ்சம் பிரியாணி வேண்டும் நீங்கள் செய்யும் சுவையான மட்டன் பிரியாணி என்று கேட்டதாகத் தாயார் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு லண்டன், ஹரோவைச் சேர்ந்த 20 வயது சுதேஷ் அம்மான், தீவிரவாதப் பிரசாரங்களைப் பரப்பியதற்காக சிறைத் தண்டனை பெற்று கடந்த வாரம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் அழகு நிறைந்த கண்ணியமான எனது மகன் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவார் என்று தன்னால் நம்பமுடியவில்லை கண்ணீர் மல்க தாயார் ஹலீமா ஃபராஸ் கான் ஸ்கை நியூஸுக்கு தெரிவித்தார்.
இணையத்தில் இஸ்லாமிய மதவாதப் பிரசாரங்களை பார்த்தபின் தனது மகன் தீவிரமயமாக்கப்பட்டதாக நம்புவதாகவும், பெல்மார்ஷ் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்தபோது மூளை சலவை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று கூறினார்.
ஹலீமா ஃபராஸ் கான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது (Bedfordshire) பெட்ஃபேர்ட்ஷையரின் டன்ஸ்ரபிலில் (Dunstable) வசிக்கிறார்.
ஸ்ரான்மோர் (Stanmore) நகரில் உள்ள பார்க் உயர்நிலைப் பாடசாலையில் 2011 மற்றும் 2016 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சுதேஷ் அம்மான் கல்விகற்றுள்ளார் என்பதை பாடசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது பாடசாலை நண்பர் ஸ்கை நியூஸிடம் கூறுகையில்; தீவிரவாதத்தின் அறிகுறிகள் எதுவும் சுதேஷிடம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் 2018 ஆம் ஆண்டில் கடைசியாகத் தனது நண்பனைப் பார்த்ததாகவும் இதுபோன்ற ஒரு துன்பகரமான காரியத்தைச் செய்திருப்பது உண்மையிலேயே ஒரு அவமானம் என்றும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத ஆவணங்களை வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றத்திற்காக சுதேஷ் அம்மான் 2018 டிசெம்பரில் 40 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்ரெதம் நகரில் உள்ள ஒரு பிணை விடுதியில் தங்கியிருந்தார்.
அம்மான் விடுவிக்கப்பட்ட திகதியை வெளியிட, நீதி அமைச்சகம் மறுத்துவிட்டது. ஆனால் கடந்த ஆறு வாரங்களுக்குள் விடுவிக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியது.
நன்றி news.sky.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.