எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்கதினமாகவே அனுஷ்டிப்போம்
In இலங்கை January 31, 2021 9:34 am GMT 0 Comments 1590 by : Yuganthini
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கையின் சுதந்திர தினநாளன்று, அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்.
அன்றையதினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில் நான்காம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திரதினத்தை துக்கதினமாகவே நாங்கள் கடைப்பிடிப்போம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.