எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிப்பு!
In ஆசிரியர் தெரிவு February 3, 2021 5:05 am GMT 0 Comments 2490 by : Litharsan
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 31ஆம் திகதி பேராறு காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தங்கள் மீது, மறைந்திருந்த இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. எனினும், தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும் மீண்டும் வீடுநோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீரென தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரம், குறித்த நபர்கள் இராணுவத்தினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.
வனப் பகுதியின் சம்பவம் நேர்ந்த இடத்திற்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அங்கு சிலர் நடமாடியதை அவதானித்ததை அடுத்தே இராணுவத்தினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறித்த மூன்று நபர்களும் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையொன்றிற்காகவே அங்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயின், இதுகுறித்து பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.