ஏவுகணை பரிசோதனைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கோரினார் – ஜனாதிபதி ட்ரம்ப்

அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜொங் உன், தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க மற்றும் தென்கொரியா படைகள் இராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்தப் போக்கானது, அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தையை குழப்பும் நிகழ்வாக பார்க்கப்பட்டது.
இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார்.
இதனால் வடகொரியா-அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதுடன் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளுக்காக வடகொரியா தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், ‘கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக மன்னிப்பு கோரினார்.
அதே சமயம் கூட்டுப்பயிற்சி எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போது ஏவுகணை சோதனைகளும் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்காக என்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்”- என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.