ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரித்தார் துருக்கி ஜனாதிபதி!

சிரிய அகதிகள் ஐரோப்பாவை அடைவதை துருக்கி தடுக்க வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் நிராகரித்துள்ளார்.
சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ரஷ்யாவுக்கு சென்றிருந்த துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன், நாடு திரும்பியதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் எல்லைக் கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். அகதிகள் அவர்கள் விரும்பும் பகுதிக்குச் செல்லலாம். அவர்களுக்கு நாம் விளக்கம் கூறத் தேவையில்லை’ என கூறினார்.
வடக்கு சிரியாவில் 33 துருக்கியத் துருப்புக்கள் இறந்ததைத் தொடர்ந்து அகதிகள் ஐரோப்பாவிற்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என்று துருக்கிக் கூறியது.
இதனால் மேற்கு துருக்கி மாகாணமாக எடிர்னெ அருகே கிரேக்க எல்லையில் ஆயிரக்கணக்கான அகதிகள் ஒன்று திரண்டுள்ளனர். இதையடுத்து கிரேக்கம் தன் எல்லையை அகதிகளுக்கு மூடியது.
இதனால், அகதிகளுக்கும் படையினருக்கும் மோதல் நிலவுகின்றது. இதனால் சிரிய அகதிகள் ஐரோப்பாவை அடைவதை துருக்கி தடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. துருக்கியில் ஏற்கனவே சுமார் 35 லட்சம் பேர் அகதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.