ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை
In இலங்கை May 2, 2019 5:47 am GMT 0 Comments 2791 by : Dhackshala
ஹட்டனில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரொருவரின் வீட்டிலிருந்து ஒன்பது கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டிலிருந்த குறித்த நபரின் சகோதரரை கைது செய்துள்ளபோதிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது யேமனில் வசிக்கும் குறித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியாக இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து ஹட்டன்- மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டின் களஞ்சிய அறையிலிருந்து குறித்த கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் சகோதரரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் அவருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக ஹட்டன், டிக்கோயா பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
பொகவந்தலாவ, ஹட்டன், மஸ்கெலியா, சாமிமலை, சாஞ்சிமலை, சலகந்த ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், முச்சக்கரவண்டி, வான், லொறி போன்ற வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்தோடு பயணிகளின் பைகளையும் பொலிஸார் சோதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.