வவுணதீவு கொலை விவகாரத்தில் நிரபராதி விடுவிக்கப்பட வேண்டும்: பூ.பிரசாந்தன்
In இலங்கை April 30, 2019 4:55 am GMT 0 Comments 2292 by : Yuganthini

இலங்கையில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள்தான் வவுணதீவு பொலிஸாரின் கொலைக்கும் காரணமென்பது உண்மையென்றால், ஏற்கனவே இக்கொலைச் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பிள்ளைகளின் தந்தையை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பூ.பிரசாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“யுத்தத்தினை நேரடியாக அனுபவித்த சமூகம் என்ற வகையில் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக தீர்வினை பெற முடியாது என்பதனை உணர்ந்தமையினால்தான் ஜனநாயகத்தின் ஊடாகவே தீர்வினை பெற எமது கட்சி முனைந்துள்ளது.
இதேவேளை கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாகும்.
இந்த வன்முறை சம்பவமானது இலங்கையிலுள்ள அனைத்து இன மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர், வவுணதீவு பொலிஸாரின் கொலையுடன் இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சந்தேகநபருக்கும் தொடர்பிருப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் வவுணதீவு கொலைச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையை நிரபராதி என காணுமிடத்து அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும்” என பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு பொலிஸார் இருவர் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான ராஜகுமாரன் என்பவரை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.