ஐ.நா.வில் வலுத்த கருத்து முரண்பாடு: கூட்டத்திலிருந்து வெளியேறினார் சரத் வீரசேகர
In இலங்கை March 17, 2018 4:51 am GMT 0 Comments 2063 by : Yuganthini

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பையும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடுமையான முறையில் பேசியதுடன், ஜஸ்மின் சூகா பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதியொருவர் கூறுகையில், யுத்தக் காலத்தில் கட்டளை அதிகாரியாக எட்மிரல் சரத் வீரசேகர இருந்தபோது, தன்னுடைய சகோதரர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதற்கான பொறுப்பை அவர் தற்போது ஏற்றுக்கொள்வாரா? இவ்விடயம் தொடர்பில் அவர் பொறுப்பு கூற வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கு சரத் வீரசிங்க குறித்த புலம்பெயர் பிரதிநிதி பொய்யான தகவலை வெளியிடுவதாகவும், குறித்த காலப்பகுதியில் தான் கட்டளை அதிகாரியாக செயற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இதன்போது மேலதிகமாக பேசுவதற்கு முற்பட்டபோது அதற்கு உபகுழுக் கூட்டத்தில் இடமளிக்கப்படவில்லை.
இவ்வாறாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து முரண்பாடு முற்றியதையடுத்து கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் சரத் வீரசேகர தனது குழுவுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.