ஐ.நா. தலைமையில் எதியோப்பியா-எரித்திரியா சமாதான ஒப்பந்தம்!
In உலகம் September 17, 2018 7:58 am GMT 0 Comments 1719 by : Farwin Hanaa
எதியோப்பியா-எரித்திரியா நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தமொன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
எதியோப்பியா பிரதமர் அபி அஹ்மட், எரித்திரியா ஜனாதிபதி இசையாஸ் அஃப்வாகி ஆகிய ஆபிரிக்க தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த இரண்டாவது சமாதான ஒப்பந்தம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சவூதி அரேபியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினையில் சுமார் 80,000 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு சமாதானத்திற்கான முதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு சுமார் இரு தசாப்தங்கள் பூர்த்தியடையவுள்ளதைத் தொடர்ந்து, இரண்டாவது ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.
அண்மையில் இரு நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டு, இரு நாட்டவர்களும் இரு ஆட்சிப்பரப்புகளிலும் நடமாட அனுமதி வழங்கி எல்லை திறப்புவிழா சிறப்பாக இடம்பெற்றது. எல்லைக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், எதியோப்பியாவின் தலைநகர் எடிஸ் அபாபாவின் ஊடாக செங்கடலுக்கான துறைமுகத்தை எரித்திரிய மக்கள் இலகுவில் அடையமுடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.