ஐ.நா. பிரதிச் செயலாளர் கூட்டமைப்புடன் சந்திப்பு!
In இலங்கை March 10, 2018 7:54 am GMT 0 Comments 1497 by : Ravivarman

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், அண்மையில் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து உதவி செயலாளரிற்கு இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கம் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் நெருங்கிய ஈடுபாட்டினை அரசாங்கத்தோடு கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் காணப்பட்ட தேவையற்ற இழுத்தடிப்புகள் காரணமாக மக்கள் அரசாங்கம் மீதும் அதனது கட்டமைப்புகள் மீதும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இந்த தீர்மானங்கள் மேலும் இழுத்தடிப்புகளின்றி நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக வழங்கிவரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கை தொடர்பில் ஐ.நா.வின் நெருங்கிய கண்காணிப்பும் தொடர்பாடலும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.