ஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 51ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஓஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு மூன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குயிண்டன் டி கொக்கின் நிதானம் கலந்த அதிரடியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் காலீல் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைதொடர்ந்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, போட்டியை பரபரப்பாக நகர்த்தியது.
இறுதி ஓவரில் இறுதி பந்தில் ஏழு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மனிஷ் பண்டே சிக்ஸர் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார்.
இதற்கமைய, ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர ஓவர் வழங்கப்பட்டது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடி சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, ஒரு சிக்ஸர் அடங்களாக 4 பந்துகளில் 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, 8 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று பந்துகளிலேயே வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை இப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தோல்வியடைந்ததன் மூலம், பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறைவடைந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.