ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்: விறுவிறுப்பான செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.
மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேண்டர்ப், எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா இலங்கை சென்றிருந்தபோது இவர்தான் மும்பை அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றுள்ள ஜேசன் பெரேண்டர்ப், எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள சென்றுள்ளார். ஆகையால் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
ஜேசன் பெரேண்டர்ப்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
……….
இதேபோல, றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த அவுஸ்ரேலிய சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்சும் அவுஸ்ரேலியா புறப்பட்டு சென்றுவிட்டார்.
……….
இதுதவிர, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரும், அவுஸ்ரேலியா புறப்பட்டு சென்றுவிட்டார்.
பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பில் விளிம்பில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, வோர்னரின் இழப்பானது பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு டேவிட் வோர்னர் சென்றதில் இருந்து கடந்த ஆண்டைத் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எல்லாம் வோர்னர் 500 ஓட்டங்களுக்கு குறையாமல் குவித்துள்ளார்.
தற்போதுவரை 12 போட்டிகளில் 692 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 8 அரை சதங்கள் அடங்கும். இவரே தற்போதுள்ள நிலவரப்படி ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
………….
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடர், தற்போது லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது.
இந்த நிலையில், தற்போது வரை, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் பிளே ஒஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மேலும் இரண்டு அணிகள் பிளே ஒஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள ப்ளே ஒஃப் சுற்றுகளுக்கான நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் உள்ளூர் நேரப்படி, இரவு 7.30 மணிக்கு நாணய சுழற்சி சுழற்றப்பட்டு, 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில், ப்ளே ஒஃப் சுற்று போட்டிகளை தற்போது இருக்கும் நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னரே ஆரம்பிக்க இருப்பதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. அதாவது, 7 மணிக்கு நாணய சுழற்சி சுழற்றப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாக இருக்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.