ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்: விறுவிறுப்பான செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.
மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த மாத ஆரம்பத்தில் பயிற்சியின் போது விரலில் காயமடைந்த வருண் சக்ரவர்த்தி, இதுவரை காயத்துக்கு சிகிச்சை பெற்றுவந்ததால், ஓய்வில் இருந்தார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் காயத்தில் இருந்து மீண்டு வராததால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சில் 7 விதமாக வீசக்கூடியவர் என்று வர்ணிக்கப்பட்ட 27 வயதான வருண் சக்ரவர்த்தி, நடப்பு ஐ.பி.எல். தொடரின் ஏலத்தில் அடிப்படை விலையாக 20 இலட்சம் ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர், ஆச்சரியப்படும் வகையில் 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். கொல்கத்தாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் களம் இறங்கிய அவர் 3 ஓவர்களில் 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
அவர் தனது முதல் ஓவரிலேயே 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
………………
டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கார்கிஸோ ரபாடாவுக்கு, முதுகு பகுதியில் வலி இருப்பதால் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டதாகவும், அந்த பரிசோதனைகள் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் கடைசி மற்றும் பிளே ஓஃப் சுற்றில் ரபாடா பங்கேற்பாரா? என்பது தென்னாபிரிக்கா கையில்தான் உள்ளது. உலகக் கிண்ண தொடருக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ரபாடா காயம் தென்னாபிரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரபாடா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.82 ஓட்டங்களளே விட்டுக்கொடுத்துள்ளார். அத்தோடு, அதிக விக்கெட்டுகள் வீழ்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
……………..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், கடந்த மூன்று போட்டிகளில் களமிறக்கப்படாதது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெக் கல்லிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் குல்தீப் யாதவ், நடப்பு தொடரில் பெரிதான தாக்கத்தை செலுத்தவில்லை.
இந்த நிலையில், குல்தீப் யாதவ் குறித்து கல்லிஸ் கூறுகையில் ”இந்த தொடருக்கான ஈடன் கார்டன் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் கடினமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கு இந்த வருடம் மிகவும் கடினமானது. ஆனால், இதில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அணியில் இருந்து நீக்கியது அவரை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது சற்று மாறுபட்ட முறைமை. சரியான சமமான அணியை உருவாக்க வேண்டிய நிலை இருந்ததால், துரதிருஷ்டவசமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. அவரது சரியான லைன் லெந்தை பெறுவதற்காக வலையில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். ஆகவே, உலகக் கிண்ண தொடருக்கு தயாராக இருப்பார் என்பது உறுதி” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.