ஒட்டுசுட்டான் பிரதேச காணிப் பயன்பாட்டு குழுகூட்டம்: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
In இலங்கை January 20, 2021 9:36 am GMT 0 Comments 1290 by : Yuganthini

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் மக்களின் காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கு பிரதேச செயலாளர் தலைமையிலான கூட்டமொன்று கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்து நடைபெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பல மக்களின் காணிப்பிணக்குகள், மீள்குடியேற்றப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் தீர்த்துவைக்கப்படாத நிலைதொடர்ந்து கொண்டு வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பலர், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று, காணிப்பிணக்கு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் வாசலில் தனது சொந்த காணியினை மீட்டுத்தர கோரி, காணி உரிமையாளர் ஒருவர் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
காணிப்பயன்பாட்டுக்குழுக் கூட்டம் மாநாட்டு மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் நடைபெற்று வந்தவேளை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், சற்று நேரம் கழித்து காணொளி எடுக்கமுடியாது என்றும் தகவல் திரட்டில் ஈடுபடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரமுடியாத நிலை இங்கு காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.