ஒரு வருடத்திற்கு பின்னர் பொது வெளியில் தோன்றினார் வடகொரியத் தலைவரின் மனைவி!

வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் இன் மனைவி ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர் பொது நிகழ்வொன்றில் தோன்றியுள்ளார்.
வடகொரியாவின் முன்னாள் தலைவரும், இந்நாள் தலைவர் கிம் யொங் உன் இன் தந்தையுமாகிய கிம் யொங் இல் இன் பிறந்த தினத்தையோட்டி நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் செவ்வாய்க்கிழமை கிம் யொங் உன் கலந்து கொண்டுள்ளார்.
அவருடன் இணைந்ததாக அவரது மனைவி ரி சொல் யு உம் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக அவர் தொடர்பில் வெளிவந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பொது நிகழ்வில் தோன்றியிருந்தனர். அதன் பின்னர் தான் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது.
இந்நிலையில் ரி சொல் யு இன் உடல் நிலை குறித்த சில சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. தற்சமயம் அந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாகவே அவர் பொதுவெளியில் தோன்றுவதை நிறுத்திக் கொண்டார் எனத் தெரிவித்திருக்குமு; தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவைகள் அமைப்பு, சிலவேளை அவர் தமது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வட கொரிய அதிபருடன் சிரித்தபடி நிகழ்வை ரி சொல் யு கண்டுகளித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிகழ்வில் யாரும் முகக்கவசங்களையும் அணிந்திருக்கவில்லை, அதேநேரம் சமூக இடைவெளியையும் பேணவில்லை என்பது புகைப்படங்களின் ஊடு காண முடிகிறது.
இதுவரை வடகொரியாவின் கொரோனா தொற்று நிலைவரங்கள் குறித்தும் எந்தவித புள்ளிவிபரங்களும் வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.