“ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம்” – கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !
In இலங்கை February 9, 2021 11:32 am GMT 0 Comments 1930 by : Jeyachandran Vithushan

ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மனுதாரரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.
எனவே இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை இடம்பெற்று வருவதால், மனுவை தொடர தேவையில்லை என்பதால் அடிப்படை உரிமை மீறல் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதியரசர்களிடம் விண்ணப்பம் செய்தனர்.
இந்நிலையில் குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், மனு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்தது.
திகாமடுல்ல பகுதியில் இடமபெற்ற பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கருணா அம்மான், யுத்த காலத்தில் ஆனையிறவு களமுனையில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் படையினரை தான் கொன்றதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.