கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் நாளை(திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தெரிவு செய்யவுள்ளனர்.
அவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும். மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த வீரரை தனது வாக்களிப்பின் மூலம் முடிவு செய்வார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்படுவர்.
இதற்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, அஸ்வின் (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), ஸ்டீவ் சுமித் (அவுஸ்ரேலியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), வில்லியம்சன் (நியூசிலாந்து), சங்ககரா (இலங்கை) ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.
இதில் விராட் கோலி கடந்த 10 ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதேபோல கடந்த 10 ஆண்டில் சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர், 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோரும் தெரிவு செய்யப்படுகிறார்கள். மேலும் சிறந்த வீராங்கனைகளும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் விராட் கோலி வில்லியம்சன், ஸ்டீவ் சுமித், ஜோரூட், ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான தெரிவு பட்டியலில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், லிசித் மலிங்க (இலங்கை), ஸ்டார்க் (அவுஸ்ரேலியா), சங்ககரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஆரோன் பிஞ்ச் (அவுஸ்ரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீட் கான் (ஆப்கானிஸ் தான்), இம்ரான் தாகிர் (தென் ஆப்பிரிக்கா), லிசித் மலிங்க (இலங்கை), ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.