கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் – முல்லையில் தேவானந்தா சபதம்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அங்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் உணர்வு ரீதியான விடயமாக எனக்கு அமைந்திருக்கின்றது. இவ்விடயத்தில் இந்தியத் தரப்பினரே தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது தமிழக மக்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மறக்க முடியாதவையாக நன்றிக்குரியவையாக இருக்கின்ற போதிலும், எமது மக்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
இதன் காரணமாகவே அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளோம்.
அத்துடன், எல்லை தாண்டுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்வது தொடர்பாக இன்றும் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளோம்.
கைது செய்யப்படுகின்றவர்களை கௌரவமாக நடத்துமாறு கடற்படை தளபதியைக் கேட்டுக்கொண்டுள்ளேன். கைது செய்யப்படுகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்கு பொருத்தமான பாடசாலை ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு வடக்கு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சுதல் போன்ற தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
கடற்றொழில் திணைக்கள மாவட்ட அதிகாரிகாரிகள் எதிர்காலத்தில் விரைந்து நடவடிக்கைளை மேற்கொள்வார்கள்.
அதேவேளை, தன்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று ஆறாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பதை போராட்டக்காரர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்’ எனவும் கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியினை அடுத்து மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.