கட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி

கட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பொறுப்புக்களை மக்களுக்காக உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான ஒழுக்கப் பண்பாடுகளுடன் புதிய உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது.
இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கட்சித் தலைவர் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தமன்கடுவ நகர சபை, தமன்கடுவ பிரதேச சபை, திம்புலாகலை பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, ஹிங்குராங்கொடை பிரதேச சபை, லங்காபுர பிரதேச சபை, மெதிரிகிரிய பிரதேச சபை மற்றும் எலஹர பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இதன்போது பதவிப்பிரமாணம் செய்தனர்.
பிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு ‘மகாத்மா காந்தி’ என்ற நூலும் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை தொடர்பான நூலும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.