கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
In ஆசிரியர் தெரிவு January 16, 2020 11:39 am GMT 0 Comments 3621 by : Dhackshala

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர், சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள், வசதிகள் மற்றும் பயணிகள் சேவை குறித்து பரிசீலித்தார்.
மேலும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல இடங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டார்.
அதற்கமைய அவர், விசேட பொருளாதார மையம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இவ்வாறு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயங்களின் பின்னர் அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மையில் திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்ட அவர், வைத்தியர்களை சந்தித்து மக்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார். அத்தோடு மக்களை சந்தித்து மக்களின் நலன்கள், தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன்போது, நோயாளர்களின் சொந்த ஊரை கேட்டறிந்த ஜனாதிபதி, தூர பிரதேசங்களில் இருந்து வந்திருந்த நோயாளர்களிடம் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்துகொண்டார்.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலைகள் அமைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.