கண்டி சம்பவம் போன்று அளுத்கம பின்னணியையும் ஆராய வேண்டும்: அசாத்சாலி
ண்டி வன்முறை சம்பவத்தை போன்று அளுத்கம- கிந்தோட்டை கலவரங்கள் குறித்து ஆராய்ந்து அவற்றின் பின்னணியை கண்டறிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 23 பேர்களில் ஒருவரேனும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இல்லை.
இவை அனைத்தையும் வைத்து நோக்கும்போது கண்டி, அம்பாறை சம்பவங்கள் குறித்து புரிந்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். இவைதான் ராஜபக்ஷேக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அளுத்கம கலவரம் இடம்பெற்றபோது, அதனை அக்காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னெடுத்ததாக ராஜபக்ஷேக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, கண்டி சம்பவத்தை ஆராய மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று, அளுத்கம- கிந்தோட்டை வன்முறைகள் குறித்து ஆராயவும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பின்னணியில் செயற்பட்டவர்களை கண்டறிற்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, கண்டி சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் வழங்கப்பட்டது. அத்தொகை தற்போது எவ்வாறு குறைந்தது என எனக்கு தெரியாது.
அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க முடியுமாயின், கண்டி சம்பவத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கும் அதே தொகை கட்டாயமாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதுமாத்திரமின்றி மக்களது வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.