கத்திரி வெயிலினால் சுற்றுலாத்துறை பாதிப்பு
In இந்தியா May 5, 2019 6:49 am GMT 0 Comments 2259 by : Yuganthini

இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அன்றாட கடமைகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுற்றுலா நகரமான புதுச் சேரியில் கடந்த ஒரு மாதகாலமாகவே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது கத்திரி வெயில் தொடங்கியிருக்கின்றது. வழமையாக வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய நகரில் இந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவடைந்துள்ளது.
வாரத்தில் இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வௌிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமானதாக இருக்கும்.
கடற்கரை பிரதேசங்கள் நிரம்பி வழியும் அதேவேளை, வியாபார நடவடிக்கைகளும் சிறப்பான வகையிலே இடம்பெறும். இருந்த போதும் தற்போது வெயிலின் தாக்கல் காரணமாக அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
அத்துடன் சுற்றுலாத் தளங்களான படகு குழாம் மற்றும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலே சுற்றுலாப் பயணிகளின் வரவு தொடர்ந்தும் குறைவடைந்து வருகின்றது.
மேலும் இந்த கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அனல் காற்று வீசும் என்றும் வெயிலின் பாதிப்பு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
எனினும் கோடைக் காலம் நிறைவடையும் தருவாயில் இந்த வெப்பத்தின் பாதிப்பு படிப்படியாக குறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரங்களில் சற்று வெப்பம் தணிவதுடன் கடல்காற்று அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதலை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தமிழகத்தை ஊடருத்துச் செல்வதாக இருந்த ஃபானி புயல் திசைமாறிச் சென்றதன் காரணமாக வளிமண்டலத்தில் இருந்த ஈரப்பதனையும் அந்த புயல் ஈர்த்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெயிலின் காரணமாக வறட்சியான காலநிலை நிலவுகின்றது. அத்துடன் அனல் காற்றும் அதிகமாக வீசுகின்றது.
இந்த அனல் காற்று இன்னும் இரண்டு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தற்போது தொடங்கியிருக்கின்றது.
இந்த கத்தரி வெயிலானது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.