கனடாவில் முதல் தடவையாக இன்றுமுதல் மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்!

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது,
கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை எட்டாயிரத்து 600இற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
கனடாவில் கியூபெக் மாகாணத்திலேயே அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி ஒன்று முதல் ஏழாம் திகதி வரை சராசரியாக நாளுக்கு இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இந்த மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இரவு எட்டு மணிமுதல் அதிகாலை ஐந்து மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று சனிக்கிழமை முதல் குறைந்தது பெப்ரவரி எட்டாம் திகதிவரை இது நீடிக்கும் என கியூபெக் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தநேரம், ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஆறாயிரம் கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவில் உரிமைகள் குழுக்கள் ஊரடங்கு உத்தரவை விமர்சித்துள்ளதுடன் இது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பொலிஸாரால் இன ரீதியான பாகுபாட்டுக்கும் வழிவகுக்கும் என கூறியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.