கனேடிய பிரதமரின் கருத்திற்கு சீனா கண்டனம்
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கனேடியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது சீனாவின் தன்னிச்சையான செயற்பாடு என கனேடிய பிரதமர் சீனாவை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்துமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரி ஹுவா சுன்யிங் (Hua Chunying) கனேடிய பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் நீதி, இறைமைக்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். கருத்துகளை முன்வைப்பதற்கு முன்னர் சீனாவின் சட்டங்களை அறிந்துகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
222 கிலோகிராம் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவருக்கான தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பானது ஏற்கனவே பாதிப்படைந்திருந்த சீன- கனேடிய உறவை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.