UPDATE -ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் – கூட்டமைப்பு பங்கேற்கவில்லை!
In ஆசிரியர் தெரிவு July 18, 2019 8:07 am GMT 0 Comments 2029 by : Dhackshala

கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆதவனுக்கு தெரிவித்தார்.
மேலும் தமிழர் சார்ந்த பிரச்சினை ஒன்றிற்காக கூடி குரல்கொடுப்பதற்கு தமிழ் தலைமைகள் ஒன்றுகூடாமை வருத்தத்திற்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், வேலுகுமார், திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கன்னியா நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
கன்னியா உள்ளிட்ட பிரச்சினைகள் – ஜனாதிபதியுடன் தமிழ் தலைமைகள் முக்கிய பேச்சு!
கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விகாரைகள் அமைக்கப்படுவது, தமிழர்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
கண்னியா விவகாரம் மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் மனோ, குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்ததுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். எனினும் சுமுகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
அதுமட்டுமல்லாது, நேற்று முன்தினம் கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட சென்ற மக்களை, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் தடுத்துநிறுத்தியமையினால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான அவசர கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.