கருக்கலைப்பு சட்டமாக்கபடுவது அவசியமா?
August 12, 2018 11:56 am GMT
இலங்கையில் வருடம்தோறும் 240,170 ஆண்கள் சட்டவிரோத கருக்கலைப்புக்கு காரணியாகின்றனர் என்பது கசப்பான உண்மை. ஆகவே கருக்கலைப்பு சட்டமாக்கபடுவது அவசியமே.
நாம் அன்றாடம் ஊடகங்கள் மூலமாக குழந்தை அங்கே வீசப்பட்டுள்ளது சிசு இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நம் காதுகளுக்கு வருகிறது. கூடவே பல காப்பகங்களில் குழந்தையை பிரசவித்த 18 வயதுக்கு குறைந்த பெண்களை பிள்ளைகளோடு பராமரிக்கின்றன. கொழும்பை அண்டியுள்ள காப்பகத்தில் 14 வயதுக்கு குறைந்த 10 கும் மேற்பட்ட குழந்தைகள் தமது கையில் இன்னுமொரு குழந்தையுடன் இருப்பதை பார்ப்பது மிகவும் வேதனை தரும் விடயம்.
இக்குழந்தைகள் தம் உறவினர்களால் சிதைக்கபட்டவர்கள் என்பது கசப்பான உண்மை. இதே போன்று பல காப்பகங்கள் உண்டு. பலர் எடுத்தவுடன் பெண்களை இலகுவாக குற்றம் சட்டி விடுவார்கள் அல்லது காப்பகங்களை குற்றம் சாட்டுவர்.
ஆனால் ஒருபோதும் ஒரு பெண்ணையோ குழந்தையோ கருவுற செய்தவனை குற்றம் சொல்வதில்லை அல்லது அப்படி சொல்வதோ தேடுவதோ குறைவு. காரணம் எங்கள் சமூகம் பெண்ணைத்தான் ஒழுக்கம் உள்ளவளாக இருக்க சொல்கிறதே தவிர ஆணுக்கு அல்ல.
ஏன் கருக்கலைப்பு சட்டமாக்கப்பாடல் அவசியம்?
இலங்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு 658 க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் நடந்தேறுவதாக அண்மையில் இலங்கையில் நடந்த வைத்திய நிபுணர்களின் மாநாட்டில் கூறப்பட்டது. அப்படியாயின் வருடத்துக்கு 240,170 சட்டவிரோத கருக்கலைப்புகள் நடந்தே தீருகின்றன. இந்த 240,170 பெண்களும் குறைந்த பட்சம் 240,170 ஆண்களால் கருவுற்றவர்கள்.
இலங்கையில் கருக்கலைப்பு சட்டமாக்கபடாவிடாலும் கருக்கலைப்பு நடந்தே தீருகின்றது என்பது நாம் அறிந்த உண்மை. இதில் ஊரில் மருத்துவிச்சிமார், அனுமதி பத்திரம் இல்லாமல் இயங்கும் வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலைகளிலும் இவை நடந்தேறுகின்றன.
இதில் அதிக்கபடியான கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறுகின்றது. இது பெண்ணின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றது.
கிட்டதட்ட இலங்கையில் மகபேற்று பிரிவுக்கு வரும் 6 – 7 வீதமான பெண்கள் கருக்கலைப்புடன் சம்பந்தபட்ட நோய்களுடன் வருவதாக தரவுகள் சொல்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்பட்ட சுகவீனத்துக்கு ஆளானவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதைதவிர பலவித காரணங்களால்( பாலியல் வன்புணர்வு உட்பட) கருவுறும் அல்லது கருக்கலைப்பு செய்யப்படும் குழந்தைகளின் விபரம்( 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் ) இன்னும் தெரியாததாகவே உள்ளன.
பாதுக்கப்பில்லாத சட்டவிரோத கருக்கலைப்புகளால் அதிக்கபடியான உயிர்கள் இழக்கபடுகின்றன – சிசு மரண வீதத்தை அதிகரிக்கின்றது. பெண் கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகின்றாள் – பிள்ளை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை இழக்கின்றாள்(பலதடவை கருக்கலைப்பு செய்யும் இளவயது பெண்கள்) இவ்வாறாக பட்டியல் கூடிகொண்டே போகும்.
இவைதவிர ஒரு பெண் கருவை கலைப்பதால் அல்லது விரும்பமில்லாத கருவை சுமப்பதால் பலவகையான சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள் என்பதை நாம் கருத்தில் கொள்ளலும் அவசியம்.
உதாரணமாக 18 வயதுக்கு குறைந்த குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாகவோ அல்லது வன்புணர்வினாலோ கருத்தரிக்கும்போது, அது வேண்டப்பாடாத கருவாகின்றது. இதை கலைக்கவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
அந்த குழந்தை கருவை சுமந்தால் முதலாவது அவளின் கல்வி பாதிக்கப்படும், கல்வி பாதிக்கப்படுமிடத்து வாழ்வே கேள்விக்குறியாகும்.
ஆகவே இப்படி பட்ட பெண்கள் தாங்களே கருவைபற்றிய முடிவை எடுப்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஒரு பெண்தான்தான் கருவை சுமப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கவேண்டும். காரணம் அது அவளின் உடல் – பிள்ளை பிறந்தால் அது அவளின் தனிப்பட்ட பொறுப்பாகின்றது. இவ்வாறு இருக்கையில் கருக்கலைப்பு முக்கியமாகின்றது.
மறுபுறத்தில், கருக்கலைப்பு சட்டமாக்கப்பட்டால் கருக்கலைப்பு வீதம் அதிகமாகும், கலாச்சாரத்தை பாதிக்கும், முறையற்ற பாலியல் உறவை ஊக்குவிக்கும், இது கொலைக்கு சமம் போன்ற கருத்துக்கள் எதிர்வினையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால் சட்டமாக்கபட்ட நாடுகளான தெற்கு ஆபிரிக்கா, ஐக்கிய ராச்சியம், சைப்பிரஸ், அயர்லாந்த் போன்ற நாடுகளில் கருக்கலைப்பு வீதம் சட்டமாக்கப்பட முதல் இருந்த எண்ணிக்கையைவிட குறைந்துள்ளதை தரவுகள் சுட்டி காட்டுகின்றன.
அதேவேளை, கருக்கலைப்பை சட்டமாக்குவதன் மூலம் முற்றாகவே கருக்கலைப்பை நிறுத்திவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக பெண்ணை குற்றவாளியாக பார்க்கும் மனோபாவம் மாறவேண்டும், பாலியல் கல்வி பாடசாலையிலுருந்து தொடக்கி வைத்தியசாலைகள் வரை கற்றுகொடுக்கபடவேண்டும். குடும்ப கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும் – குடும்ப கட்டுபாட்டு முறைகளை கையாள தயங்க கூடாது.
முக்கியமாக பாலியல் சம்பந்தபட்ட கலந்துரையாடல்கள் பொது வெளியில் நடைபெற வேண்டும். முக்கியமாக பெற்றோர் பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை கலந்துரையாடவேண்டும்.
“சட்டமாக்கப்படுதலை எதிர்பவர்கள் சட்டவிரோத கருக்கலைப்புக்கு உடந்தையானவர்கள்” என வைத்திய காலாநிதி பேராசிரியர் சபாரத்தினம் அருள்குமரன் (சென்ட் ஜோர்ஜ் பல்கலைகழகம் – ஐக்கிய ராஜ்ஜியம் ) கூறுகிறார்
பூரண விருத்தியடைந்த ஒரு முழு மனிதனுக்கு தயவு தாட்சண்யம் இன்றி மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ளுபவர்கள் வாழும் நாட்டில் கருக்கலைப்பு சட்டமாக்கபடுவது ஒன்றும் மரண தண்டனைக்கு சமமான குற்றம் அல்ல.

மனித உரிமை செயற்பாட்டாளர்
-
மரண தண்டனை போதைவஸ்து பாவனையை ஒழிக்காது
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பின்ஸ...
-
அதிகாரம் பகிரப்பட்டால் நாம் அதை பகிர்வோமா ?
“புதிய அரசியல் யாப்பு திருத்த வரைபை நான் படிக்கவும...