கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி!
கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஒரு தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்கவைத்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி நடை பெற்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ஆளும் காங்கிரஸ் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்ததுள்ளது. இதன் மூலம் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ராமநகர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா தளம்( எஸ்) வேட்பாளரும், முதல் மந்திரி குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்( எஸ்) தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா போன்ற 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற நிலையிலும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியினருக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கடு.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.