கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது: மக்கள் கொந்தளிப்பு
In ஏனையவை March 26, 2018 4:03 am GMT 0 Comments 1687 by : Suganthini
ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் Carles Puigdemont), ஜேர்மன் நீதிபதி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்லாந்துக்குச் சென்ற கார்லெஸ் புகிடமொன்ட், அங்கிருந்து டென்மார்க்குக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், டென்மார்க்கிலிருந்து பெல்ஜியத்துக்குச் செல்லும் வழியில் ஜேர்மனியில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக, அவரது பேச்சாளர் ஜோன் மரியா பீக்கெய் (Joan Maria Pique) தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்ன் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பிடியாணை உத்தரவையடுத்து, ஜேர்மனியின் வட. மாநிலமான ஷெல்ஸ்விக் – ஹோல்ஸ்டைன் (Schleswig-Holstein) பகுதியில் கார்லெஸ் புகிடமொன்டைக் கைதுசெய்ததாக ஜேர்மன் பொலிஸார் கூறியுள்ளனர்.
இருப்பினும், இவர் ஜேர்மனியிலிருந்து உடனடியாக நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.
ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்டபோது, இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து, கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனத்தை கார்லெஸ் புகிடமொன்ட் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்திய ஸ்பெய்ன் அரசாங்கம், அவரை கைதுசெய்வதற்கும் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பெல்ஜியத்துக்கு தப்பிச்சென்ற நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.
இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 25 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்க நேரிடுமென, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கற்றலோனியாவில் பதற்றமான நிலைமை காணப்படுவதுடன், அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுமார் 50 பேர் காயங்களுக்குள்ளாகியதுடன், 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றி உரையாற்றிய கற்றலோனியச் சபாநாயகர் ரோஜர் டொரண்ட், இறையாண்மை மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறு கற்றலோனியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதியைப் பேணுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.