கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதி!

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை 2020ஆம் ஆண்டிலேயே யதார்த்தமாக்கும் வகையில் அறிமுகப்படுத்தும் இந்த காப்புறுதித் திட்டமானது பிரதமரின் மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையினால் ‘பிரேக்ஷா ரக்ஷன’ என்ற இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, திறமை மிக்க மேடை நாடகத் துறையில் நாடக திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, வசனம், பின்னணி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, மேடை அமைப்பு, இசையமைப்பு, மேடை நிர்வகிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஈடுபடும் 35 வயதிற்கும் 75 வயதிற்கும் இடையிலான நாடகக் கலைஞர்களுக்கு காப்புறுதி வழங்கப்படும்.
இந்தக் காப்புறுதித் திட்டத்தற்கென காப்புறுதி பயனாளர்களிடமிருந்து எவ்வித தொகையும் அறிவிடப்படாமை சிறப்பம்சமாகும். இக்காப்புறுதித் திட்டத்தில் நாடகத் துறையில் தங்களது திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தேசிய மட்டத்தில் விருது பெற்றவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் திகதிக்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், விண்ணப்பத் திகதிக்கு 10 வருடங்களுக்குக் குறையாது நாடகத்துறையில் ஈடுபட்டவர்களும் இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
‘பிரேக்ஷா ரக்ஷன’ காப்புறுதிக்கான விண்ணப்பங்களை www.towerhall.lk என்ற வலைத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்கள் 2020 டிசம்பர் 11ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் நாயகம், டவர் மண்டப அரங்க அறக்கட்டளை, இல. 123, சவ்சிறிபாய, விஜேராம மாவத்தை, கொழும்பு-07 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.