கல்முனையில் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனம்
In அம்பாறை December 17, 2020 8:44 am GMT 0 Comments 1410 by : Yuganthini
கல்முனை செய்லான் வீதியிலிருந்து சின்னத்தம்பி வீதி வரை உள்ள பாதைகள் மற்றும் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று (புதன்கிழமை) இரவு, 8.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் சுமார் 15க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேலும் தொற்றாளர்களை இனங்காணும் வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் செயிலான் வீதி, கடற்கரைப்பள்ளி வீதி, மாதவன் வீதி, சின்னத்தம்பி வீதி ஆகிய 4 வீதிகளும் அதில் உள்ள சகல உள்வீதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் மேற்படி 4 வீதிகளில் உள்ளவர்ளுக்கு எழுமாற்றாக அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கூடுதலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம் கல்முனை சந்தையை இன்று காலை 8 மணியுடன் மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சார், கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரீப், கல்முனை மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம்.தர்மசேன, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ.ரிஸ்னி, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணஸ்வரன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் அஜ்வத், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம்.நிசார், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக், செயலாளர் எஸ்.எல்.ஹமீட், கல்முனை சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.