கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராகத் தெரிவானார்.
முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி) கட்சித் தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்குப் புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாநகரபையில் நடைபெற்ற இவ்விசேட கூட்டத்தில் மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 15 பேரே சமுகமளித்திருந்த நிலையில், கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், சுயேட்சைக் குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதி முதல்வரின் கன்னி உரையில், “தமிழ், முஸ்லிம் உறவு என்பது பேணப்பட வேண்டிய ஒன்று. இன மத பேதத்தித்திற்கு அப்பால் செயற்படுவேன். இதற்காக அனைவருடன் ஒன்றிணைய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.