கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு! – மொஹான் லால் கிரேரு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளில் 80 வீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிமுதல் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களின் சகல செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானம் என்னவென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த போதே உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
ஓய்வூதிய கொடுப்பனவு, வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவற்றிற்கான நிதி தொடர்பாக திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி கிடைத்தவுடன் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம், இன்று 23ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன் காரணமாக பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.