கஷோக்கி கொலை விவகாரம் – நீதியான விசாரணையை கோரும் மேற்கத்தேய நாடுகள்!
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், மேற்கத்தேய நாடுகளும் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளன.
சவுதி அரசாங்கத்தையும், அந்த நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதிவந்த சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, கொலை செய்யப்பட்ட விவகாரம், சர்வதேச ரீதியாக பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த 02 ஆம் திகதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றபோது காணாமல் போனார்.
இந்த விடயம் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, அவர் தூதரகத்தைவிட்டு பின்கதவு வழியாக சென்றுவிட்டார் என்று சவுதி தெரிவித்துவந்தது.
எனினும், இவர் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுவிட்டார் என அமெரிக்காவும் துருக்கியும் உறுதியாக கூறிவந்தமையால், தூதரகத்தில் விசாரணை நடவடிக்கைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
இந்த நிலையில், இவர் கொலை செய்யப்பட்டதை சவுதி அரசாங்கம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.
சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே, விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டே ஊடகவியலாளர் ஜமால், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இதற்கான குரல் பதிவுகள் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல நாட்டு தலைவர்களும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியை அடுத்து, இது தொடர்பாக 18 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
எனினும், சவுதி அரேபியாவின் இந்த நகர்வுகள் மட்டும் போதுமானதாக இல்லை என அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டமை வருந்தத்தக்கது என்றும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சவுதியின் விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, ஜமாலின் உடல் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தையும் வெளியிட வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையிலேயே, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனும் இந்த விடயம் தொடர்பில் விரிவான மற்றும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திள்ளன.
மேலும், இந்த விடயம் தொடர்பில் தேவையேற்படின் சர்வதேச விசாரணைக்கு செல்வோம் என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.