காசிம் சோலைய்மெனி கொல்லப்படுவதற்கு பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனமும் உதவியது- ஈரான் தரப்பில் குற்றச்சாட்டு!

ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சோலைய்மெனி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நிலையில், இதற்கு பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனமும் ஜெர்மனியில் உள்ள ஒரு விமானத் தளமும் உதவியிருப்பதாக ஈரானிய வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
காசிம் சோலைய்மெனி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி அலி அல்காசிமெர், லண்டனை தளமாகக் கொண்ட பாதுகாப்புச் சேவை நிறுவனமான ஜி-4 எஸ் (G4S), சோலைய்மனியைக் கொன்றதில் பங்கு வகித்ததாகக் கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முகவர்கள் தளபதி சோலைய்மனி மற்றும் அவரது சக போராளிகளின் தகவல்களை பயங்கரவாதிகள் விமான நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுகுறித்த ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை.
இதேவேளை, ஜேர்மனியில் உள்ள ஒரு அமெரிக்க விமானத் தளம், சோலைய்மனி மீதான தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகளுக்கு உதவியதாக ஈரான் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க ஈராக், சிரியா, லெபனான், கட்டார், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு நீதித்துறை பிரதிநிதித்துவ உரிமைகளை ஈரான் வழங்கியுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.