காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தலில்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
In இலங்கை November 30, 2020 9:32 am GMT 0 Comments 1493 by : Yuganthini

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ற்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதி, கொழும்பு- வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து காரைநகர், சங்கானை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரம் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஆலயம் ஒன்றில் சூரன் போர் பூஜை நடந்தியதால், அங்கு சென்ற அடியவர்கள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காரைநகர் பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை), கடைகள் பல மூடப்பட்டுள்ளன. பிரதேசத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள் பலர் பணிக்குச் செல்லவில்லை. பாடசாலையில் மாணவர் வரவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒரு தொகுதியினரின் பி.சி.ஆர்.பரிசோதனை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சிறப்புத் தேவையுடைய ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக மூன்று சக்கர வண்டியில் இன்று காலை காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு சிகிச்சை வழங்க வைத்தியசாலை தரப்புகள் மறுப்புத் தெரிவித்து வெளியேற்றியதாக பிரதேச சபைத் தவிசாளருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.